வருடத்தில் சிலமுறைதான்
எதிர்ப்படுகிறாய்.
வருடம் முழுமைக்கும்
பொங்கி வழிகிறது வெட்கம்.
எதிர்கொள்ள இயலாமல்
தலைகுனிந்து கடக்கிறேன்.
என் ஓரவிழிப் பார்வையை
எப்படியோ கவ்வி விடுகிறது
உன் கருடப் பார்வை.
நெளியும் மீனாய்
ஓடும் என் பின்
பரவிக் கிடக்கிறது
உன் பார்வை அணைப்பு.
உணர்வுகள் கிளர்ந்தெழ
பக்கம் இல்லாத உன் தோள்சாய்ந்து
இம்முறையும் கடக்கிறேன்
ஒரு சந்திப்புக்கும்
மறு சந்திப்புக்கும் இடையில்
யார் யாரோ பகிர்ந்த புகைப்படங்களில்
சிங்கம் போல் சிலிர்த்து நிற்கும்
உனைப்பார்த்து மௌனமாய் ரசித்து
பெருமிதப்பட்டுக் கொள்கிறது மனம்.
உனக்குத் தெரியாமல்
உன்னைக் காதலிப்பதென்பது பெரும் சுகம்.