எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஜூன், 2015

கட்டவிழ்க்காத அணை

அணையை அளப்பதைத் தவிர
வேறென்ன இருக்கிறது,
அலகில் மீன் ,
ஓய்வெடுக்க மதில்
ஓய்ந்தமர ஒற்றைக் கிளை..
கட்டியணைப்பதுமில்லை
வெட்டி விடுவதுமில்லை..
கால் விரைத்த மீனாய் மாறி
மிதக்கும் வரை
கட்டவிழ்த்து விடுவதில்லை அணை
தன்னைச் சுற்றும் பறவையை..

சனி, 27 ஜூன், 2015

எங்கே போயின அவை.



எங்கே போயின அவை.

நீருக்காக ஏங்கும் வேர்கள்
வேருக்காய்த் தவிக்கும் நீர்.

அஸ்திவாரக் கல் பாறை
அமுக்கமாய்க் கிடக்கிறது.

குட்டை கரைமோதிக்
கரைமோதிக் கலக்கமாய்ப் புலம்பும்.

வேர்கள் நீருக்காய்
மண் துழாவும்.

கரம்நீட்டிக் கரம்நீட்டிச்
சுயமிழந்து யாசிக்கும்.

கல்லைத் தொட்டவுடன்
வேர்கள் நீருக்காய்
கல் தடவும் கல்தடவும்.

அலைமோதும் நீர்
உறிஞ்சும் கடமை மறந்து.

கல்லுக்குள் நீ உரிக்க
முயலும் வேர்.

அஸ்திவாரக் கல்பாறை
நமுட்டுத்தனமாய்ச் சிரிக்கும்.

விவகாரம் புரியாமல்
நீர் புரளும் மண்ணில்
கட்டிப்பிடித்து அழும்.

எங்கே போயின அவை
நீருக்காக ஏங்கும் வேர்கள்
வேருக்காகத் தவிக்கும் நீர்.

-- 85 ஆம் வருட டைரி. 

வெள்ளி, 26 ஜூன், 2015

தூரத்துத் தென்னைகள்



தூரத்துத் தென்னைகள்
செல்லமாய் முகம் சிணுங்கும்
ஜன்னலின் இடைவழியாய்
வெய்யில் கிளைகளுக்கு
மஞ்சள் க்ரீம் பூசும்
கிணற்றோரம் கால்புதைத்து
மாடிச்சுவரில் முகம் பதிக்கும்.
மனசுக்குக் கவசமணிந்து
இனிப்பைச் சுமந்து நிற்கும்
மழைவரும்போது
சிறுவனாய் உள்ளங்கையில்
நீர்பிடித்துச் சுவற்றில்
முகத்தில் அடித்து விளையாடும்
திசைமாற விரும்பாமல்
நாணலாய் வளையாது
காற்றில் சுயமாய் நிற்கும்.
என்னவோ வெட்டி முறித்தாற்போல்
அடிக்கடி நெட்டி முறிக்கும்
நகரும் மேகங்களை
பக்கத்துச் செடிகளில் சொரியும்பூக்களை
ஜிகினா நட்சத்திரங்களை
மழைத்துளிகளை எண்ணிக்கொண்டு
ஜாலியாய்ப் பொழுது போக்கும்
ஹூம் கொடுத்து வைத்தவை.

-- 85 ஆம் வருட டைரி

வியாழன், 25 ஜூன், 2015

சிகரெட் ஊசி.



இந்த மனிதர்கள்
சிகரெட் எனும் ஊசி கொண்டு
புகை நூலை நெருப்புக்காதுக்குள்
கோர்த்து வாயில் நுழைத்தெடுத்து
உடலைப் பொத்தலாக்கிக்கொள்ளும்
முட்டாள்கள்.

சிகரெட்டின் மறுமுனையிலிருந்து
தெறித்து விழுந்த நெருப்புக்கங்கு சொன்னது
ஒரு முனையில் நான்
மறுமுனையில் மரணத்தினை
முத்தமிடும் முட்டாளின் வாய்
காற்றை உறிஞ்சி உறிஞ்சி
அவனின் ஆயுட்காலமே
உறிஞ்சப்படுகின்றது.
மனிதனைக் குழிக்குள் புதைத்துச்
செல்லரிக்க வைக்கும்
இந்தப் பைசாச வழிகாட்டிகளுக்கு
முதலில் குழிபறிக்க வேண்டும்.


-- 85 ஆம் வருட டைரி  

புதன், 24 ஜூன், 2015

நண்பனைத் தேடுகின்றேன்.



நண்பனைத் தேடுகின்றேன்.

நண்பனைத் தேடுகின்றேன் – நான்
நண்பனைத் தேடுகின்றேன்.

இருட்டுக்களின் ஈசானிய மூலைகளில்
வெளிச்சங்களின் முனைத் தெறிப்புக்களில்
பொய்மைகளின் அக்கினிக் குளிப்பில்
வாய்மைகளின் புடம்போடுதல்களில்

நண்பனைத் தேடுகின்றேன் – நான்
நண்பனைத் தேடுகின்றேன்

குடிசைகளின் வெள்ளி நிழல்களில்
கொட்டிலின் சாண வாசனைகளில்
வயல்களின் வரப்பு வெளியில்
வரண்டுபோன தரிசு நிலங்களில்

நண்பனைத் தேடுகின்றேன் – நான்
நண்பனைத் தேடுகின்றேன்

பாலைவனப் புதையல்களில்
அழுக்குகளின் நிர்வாணங்களில்
அரையிருட்டு நிழல்களில்
நட்சத்திர முனங்கல்களில்

நண்பனைத் தேடுகின்றேன் – நான்
நண்பனைத் தேடுகின்றேன்

சாலையின் மேடு பள்ளங்களில்
ஓரத்து மரங்களின் நிழல்களில்
ஒதுங்கிக்கிடக்கும் வாய்க்கால்களில்
தடம்பதித்துக் கிடக்கும் குடியானவ வாசங்களில்
மூச்சிரைக்க ஓடுகின்றேன்
நண்பனைத் தேடுகின்றேன்.

-- 83 ஆம் வருட டைரி 

செவ்வாய், 23 ஜூன், 2015

சுகப்பிரசவம்.:-



சுகப்பிரசவம்.:-

மழைமேகம்
மனதினுள் சுழன்று
சுழன்று மன்றாடிப் போராடும்.

சலன மேகமல்ல அது.
காற்றின் திசையில்
திரிந்து சுருள.

இது சூல்கொண்ட கருமேகம்
பிரசவித்தபின்தான் நிம்மதியாகும்

மின்னலாய் உடல்நெளித்துக்
மலையைப் பற்றிக் கரம்முறித்து
முட்டி மோதி சுகப்பேறாய்
சன்ன மகிழ்ச்சி தூவும்.

மரங்கள் ஆகர்ஷிக்கும்

பொழியப் பொழிய
மண் உறிஞ்சும்

நீர் தேங்கும்
மனவோர மரங்கள்
இதமாய் நீவி
சொட்டுச் சொட்டாய்
ஆறுதல் தெளிக்கும்.

-- 85 ஆம் வருட டைரி 

Related Posts Plugin for WordPress, Blogger...