எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நொடிப்பூக்கள்.

உதிர்கின்றன நொடிப்பூக்கள்.
ஒவ்வொரு இதழ்களிலும்
குழந்தை, குமரி, தாரம் என
சுருக்கங்கள் படியத் துவங்குகிறது.
தாதியாயிருந்து
தாய்மைக் கோடுகளோடு
அசைந்தாடும் சருகின்கீழ்
புதிதாய்க் காய் கனிய
விழுந்து தவழ்ந்து
உருவாக்கிய மண்ணை
முத்தமிட்டு அணைக்கிறது சருகு.

சனி, 22 பிப்ரவரி, 2014

இன்னுமொரு நாள்.

ஜன்னலோரம் உணவுக்காய்க்
காத்திருக்கிறது காக்கை.

சொட்டுச் சொட்டாய் வடிந்து
சத்தமெழுப்பி
இறுக்கத் திருகச் சொல்கிறது குழாய்.

தயங்கித் தயங்கி
உள்நுழைது காபி மணத்தை
நுகர்ந்து செல்கிறது காற்று.

விசிலடிக்கிறது குக்கர்.
இசைக்கிறது கெடிகாரம்.
அழைக்கிறது துவைக்கும் யந்திரம்.

துலக்கும் பாத்திரங்கள்
கதறிக் கொண்டிருக்கின்றன
வேலைக்காரி கையில்.

தொடங்க வேண்டாம்
இன்னொரு நாளை..

புறம்தள்ளித் தானே
ஓட்டத்தைத் துவங்கி
பிடறி பட ஓடிக்கொண்டிருக்கிறது அது.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

குயிலாய் வாழ்தல் இனிது.

கூவிக் கொண்டிருப்பது
எளிதாயிருக்கிறது..
கூடுகட்டுதலும்
முட்டையிடுதலும்
குஞ்சு பொரித்தலும்
பராமரித்தலும்
கொத்துப்படும்போது
மரிப்பிலிருந்து
உயிர்த்தலும்
போதுமெனக்
கானம் கரையக்
கருத்த வானம்
வெளுத்துக் கொண்டிருக்கிறது.
பறக்கவியலா இறக்கைகள்
ஈரத்தால் கனத்திருக்கின்றன.

சனி, 8 பிப்ரவரி, 2014

ஓடமாய்..

எந்தத் தவமும் செய்யவில்லை.
நெருப்பின் மேலோ
ஒற்றைக்காலிலோ
தலை கீழாகவோ..
பகீரதனைப் போலோ..

மாதம் மும்முறையல்ல
விரும்பிய போதெல்லாம்
துளித் துளியாய்
உனதன்பு பொழிகிறது.

மாமழையே..
குளிர்ந்த கல்லாய் நனைகிறேன்.
தனக்குள்ளே அணைகிறேன்

கூதல் நெருப்பே..
துணை திரும்பும்.
ஓடமாய்த்  தேர் ஓடும்
இது கார்காலம்
Related Posts Plugin for WordPress, Blogger...