எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஒளியும் கிளி

காதல் சீட்டெடுத்துக் கொடுத்து
முத்த தான்யம் கொறித்து
தனக்குப் பழக்கமான கூண்டில்
ஒளிகிறது கிளி.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

மனிதர் அலையும் தெருக்கள்.:-

ஆசுபத்ரிக்கோ ஆபரண மாளிகைக்கோ
தனக்குத்தானே பேசியபடி
வைத்த ஆரவாரம் அடங்கியும்
ரீங்காரம் அடங்காத பாத்திரமாய்.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சந்தோஷ மழை.

சந்தோஷமாய் நனைகிறது
மழை..
எப்போதாவது
தன்மேலும் பொழிந்தபடி.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கணப்பு.

ஒருவர் சிறகால்
ஒருவரை அணைத்தோம்.
நெருப்பில்லாமல் உருவானது கணப்பு.

புதன், 22 ஆகஸ்ட், 2012

மன ஓடு.

வெளியில் இல்லை
 உள்ளேயே சுமக்கிறோம்
அவ்வப்போது ஓளிந்து கொள்ள
மன ஓடுகளையும் கூடுகளையும்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

மனித விதைகள்..

ஒளிக்கலப்பையால் உழுது
மனிதவிதைகளை விதைத்துச் செல்கிறது
இரவுநேரப் புகையிரதம்

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுவாசம்

வீடும் சுவாசிக்கிறது
சுற்றும்
புகைபோக்கி.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

விடுதலை

உள்ளத்தின் வார்த்தைகளைப்
படிக்கத்துவங்கும்போதே
விடுதலை கிடைத்துவிடுகிறது.
முற்றுப் பெறாத கீதங்கள்
நிர்மால்யக் கொடிகள்
எழும்பத் துவங்குகின்றன.
அறுத்துக் கிடக்கும் கதிர்களாய்
அமைதியும் ஓய்வும்
தலை சாய்ந்திருக்கின்றன.
கலைந்து கொண்டிருக்கிறது
காற்று வெப்பமும் குளிருமாய்.
சுவாசங்கள் சந்திக்கும்
சங்கமத்தின்முன்னே
புரிந்துகொள்ளத்துவங்குகிறாய்
உன்னிடமிருந்து உனக்கே விடுதலை.

பூக்குயில்.

கூவுதல் என்னும்
வாசனையைப் பரப்பியபடி
மரத்தில் ஒளிந்த
ஒற்றைப் பூவாய்ப்
பூத்துக் கிடக்கிறது குயில்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

கசகசப்பு..

வழியும் வியர்வை
வழித்துச் செல்கிறது
இயல்பான மூச்சை,
இயற்கை இருப்பை
அன்பான பேச்சை..

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

நட்பூக்கள்..

பால்பேதம் அறிவதில்லை
பால்ய கால நட்புக்கள்..
பக்கம் பக்கமாய் பூத்துக் கிடக்கின்றன
பிடுங்கப்படும் நேரம் வரை.
 

புதன், 1 ஆகஸ்ட், 2012

ஆடி பதினெட்டு.

தொலைப்பதற்கு ஆட்டனத்தியும்,
துயரப்படுவதற்கு ஆதிமந்தியும் அற்று
துடைத்துக் கிடக்கிறது
ஆடி பதினெட்டு.

அறிவுரைக்காசு

சோகப் பூ சுமக்கும்
முகக்கூடை
விலையாகப் பெறுகிறது
அறிவுரைக் காசுகளை.
Related Posts Plugin for WordPress, Blogger...