சிக்கி முக்கி கல்
சிக்கி முக்கி கல்லைத் தேய்த்து
சிறு நெருப்பைக் கண்டுபிடித்தார்.
அரணிக் கட்டை கொண்டு கடைந்து
யாக வேள்வி செய்து வைத்தார்
தீக்குச்சியில் மருந்தை அடைத்து
நெருப்பை அதில் ஒளித்து வைத்தார்
உரசும் போது உயிர் பெற்று
ஒளிரும் அந்தத் தீக்குச்சி
விறகை கொண்டு மண் அடுப்பினிலே
விதம் விதமாய்ச் சமையல் செய்தார்
சுருட்டைத் தூளும் சிராய்த்தூளும்
சுள்ளிகளும் கொண்டு அடுப்பெரித்தார்.
குமுட்டி அடுப்பு கோட்டை அடுப்பு
கரி அடுப்பு இரும்பு அடுப்பு
ரம்பத்தூள் அடுப்பு தவிட்டு அடுப்பு
மண்ணெண்ணெய் அடுப்பு, சாணவாயு அடுப்பு,
எரிவாயு அடுப்பு மின்சார அடுப்பு
சூரிய அடுப்பு தூண்டல் அடுப்பு
எத்தனை அடுப்பு எத்தனை சமையல்
இத்தனையும் ஒரு சாண் வயிறு நிரப்ப.
சுடுகாற்றலை கொண்டு சமைக்கின்றார்
எரிவாயு கொண்டு சமைக்கின்றார்
மின்சாரம் கொண்டு சமைக்கின்றார்
சமைத்து சமைத்து உண்கின்றார்.
உணவைச் சமைத்து உண்ணும் மனிதரே
மனதை செம்மையாய்ச் சமைத்து வாழுங்கள்
உணவைப் பகிர்ந்து உண்ணக் கொடுத்து
மனிதம் போற்றி மகிழுங்கள்.