வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

மருதாணி



மருதாணி
==============
எனக்குள்ளேயும்
வேர் பரப்பிக்
கப்பு வெடித்துப்
பூச் சொரியும்
பய மரங்கள் பிரஸவிக்கும்.

கையிலும் காலிலும்
பச்சையாய்க் கருத்தரித்துச்
சிவப்பாய் உமிழும் உன்னை
உதிர்க்கவே மனசில்லை.

நீ குடியிருந்தது
என் வீட்டின்
வடக்கு மூலையில். 
மனசின் வசந்த மூலையில்.

உன்னின்
முட்களின் தலைவணக்கங்கள்
எனக்கு மட்டுமே சமர்ப்பிக்கப்படுகிறபோது
அடிவயிற்றின் பயச்செடிகள்
“ உன்னை யாரிடமும்
உதிர்த்து விடுவாயோவெனக்
கிளை வெடிக்கும்.” 

உன் மிருதுத் துகள்கள்
உள்ளங்கையை வருடிக் கொடுக்கிறபோது
எனக்குள்ளே ஒரு குளிர்ச்சி இரத்தம் செலுத்தும்போது
வெளிச்சப் பாதுகை தடம் பதிக்கும்போது
உன்னின் இந்தப்பணிவிடைகள்
தெருவோரப் பொறுக்கிகளிடம்
செயலாற்றுமோவென்று
பயக்கிளை பரப்பும்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))